×

முருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை ₹300 கோடியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல்

புதுச்சேரி, மார்ச் 1:  புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுவை வந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா, புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு தனியார் மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாகவும், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு புதுவை அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளேன். வெகுவிரைவில் காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்.  அதுபோல் புதுச்சேரி வந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை சந்தித்து பேசினேன். ஏற்கனவே புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் ரூ.700 கோடியில் புதிய சுற்றுலா திட்டங்களுக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.200 கோடியில் முதற்கட்ட பணிகளில் பாதி நிறைவடைந்துள்ளது. இப்பணிக்கு இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கித்தரும்படி கேட்டு கொண்டேன். அவரும் விரைவில் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

 காரைக்கால் என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த மத்திய அமைச்சர்  நிதின் கட்காரி புதுச்சேரி தலைமை செயலக வளாகத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் அளித்த விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ரூ.926 கோடி மதிப்பிலான அந்த வேலை தொடங்குகின்ற நிலையில் உள்ளது. அதை விரைவுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டேன். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று துரிதமாக பணிகளை துவங்குவதாக உறுதியளித்துள்ளார்.

 அதுபோல் ரூ.800 கோடியில் மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதிக்குள் சாலை வந்தால் வீடுகள் பாதிக்கும். எனவே, ஆரோவில் வழியாக வில்லியனூர், ஆரிய பாளையம் பகுதியில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்க ஆலோசனை கூறினோம். அதையும் ஏற்றுக்கொண்டார்.  ரூ.130 கோடியில் மதகடிப்பட்டில் இருந்து புதுச்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க வரைபடம் தயாரித்து கொடுத்துள்ளோம். இதில் சங்கராபரணி ஆற்றில் ஆரியபாளையத்தில் புதியதாக பாலம் கட்டுவதும் இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான பணி மதகடிப்பட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்தால் நெரிசலை தவிர்க்க முடியும். இதற்கும் மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 மேலும், முருங்கப்பாக்கத்தில் இருந்து சிவாஜி சிலை வரை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் மூலம் முழுமையான மேம்பாலம் கட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டேன். 9 கிலோ மீட்டர் வருகின்றது. இதற்கு ரூ.300 கோடி செலவு ஆகும். இதற்கு மத்திய அமைச்சர், எந்தெந்த இடங்களில் மேம்பாலம் கட்ட முடியுமோ அங்கு மேம்பாலம் கட்டவும், எங்கு சாலைகள் அகலப்படுத்த முடியுமோ அங்கு அகலப்படுத்தி, இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக ஏற்றுக் கொண்டார். அதனால் கடலூர், சென்னை செல்ல நெரிசலில் சிக்காமல் செல்வார்கள். நல்ல அறிவிப்பை கொடுத்த மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஜெயமூர்த்தி எம்எல்ஏ உடனிருந்தார்.

Tags : Union Minister ,Murungapakkam ,Shivaji ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...