உளுந்தூர்பேட்டை, மார்ச் 1: கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர், உளுந்தூர்பேட்டை அருகே காருக்குள் சடலமாக கிடந்தார். கோவை என்எஸ் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜெயசுபாஷ்(34). இவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் திருச்சியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்றார். பின்னர் மீண்டும் திருச்சியில் இருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டார். இந்நிலையில் அந்த கார், உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் தனியார் பாலிடெக்னிக் எதிரே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அங்கு நீண்டநேரமாக கார் நிற்பதை கண்டு சந்தேகமடைந்தனர். பின்னர் கார் கதவை திறந்து பார்த்தனர். அப்போது காரில் ஜெயசுபாஷ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்துஜெயசுபாஷின் உறவினர் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(45) என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் வழக்கு பதிந்து காரை ஓட்டிவரும்போது மாரடைப்பு ஏற்பட்டு ஜெயசுபாஷ் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.