பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் உரிமை மீட்பு மாநாட்டில் வலியுறுத்தல்

திருச்சி, மார்ச் 1: திருச்சியில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் உரிமை மீட்பு மாநாடு நேற்று நடந்தது. பொது செயலாளர் அப்சல் தலைமை வகித்தார். பாலகுமார் வரவேற்றார். ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் அசோக் சித்தார்த், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் ஆச்சாரி தல்லோஜூ, பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சேர்மன் முன்னாள் எம்பி கார்வேந்தன், வருமான வரித்துறை அதிகாரி தனசேகர், கிளை செயலாளர் கோபிநாத் ஆகியோர் பேசினர்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பேசுகையில், தமிழகத்தில் நான் பிராமின் (பிராமின் அல்லாதோர்) கழகங்கள், அமைப்புகள் இருந்ததால் தான் 69 சதவீதம் இடஒதுக்கீடு சாத்தியமானது.

இன்று இடஒதுக்கீடு கேள்விக்குறியாகி வருகிறது. அதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. அரசு துறைகள் தனியார் மயமாகி வருவது பேராபத்து. இதனால் இடஒதுக்கீடு மட்டுமல்ல வேலைவாய்ப்பும் பறிபோகும் அபாயம் உள்ளது. இடஒதுக்கீடுக்கு எதிராக ஆர்எஸ்எஸ், ஏபிவிபி போன்ற இந்துத்துவா அமைப்புகள் போராடுகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார். மாநாட்டில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் 27 சதவீதம் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனுக்கு நீதிமன்ற அதிகாரம் வழங்க வேண்டும். பிற்பட்டோருக்காக தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கி பிற்பட்ட மக்கள் சமுதாய வாரியாக பயன்பெற மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: