×

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மூடிய எம்ஜிஆர் சிலை மீண்டும் திறப்பு வேலூரில் அதிகாரிகள் குழப்பம் தேர்தல் நடத்தை விதிகள் என்ன?

வேலூர், மார்ச் 1: வேலூரில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகளால் அதிகாரிகள் மூடிய எம்ஜிஆர் சிலை மீண்டும் திறக்கப்பட்டது. தலைவர்கள் சிலைகளை மூடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் எம்எல்ஏ, எம்பிக்களின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதேபோல் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் துணியால் மூடினர்.

ஆனால் காட்பாடியில் எம்ஜிஆர் சிலை மூடப்படாமல் இருந்தது. இதேபோல் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் மூடியும், மூடாமலும் உள்ளது. இதற்கிடையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் நேற்று முன்தினம் மூடிய எம்ஜிஆர் சிலையை நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் திடீரென திறந்துவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஒரு சிலர் சிலையை மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். சிலர் சிலைகளை மூட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக சொல்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் மூடிவிட்டார்கள்.

உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு வைக்கப்படும் சிலைகளை மட்டும் மூட வேண்டும். இறந்த தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என்று பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் சரியாக கிடைக்காததால் மூடிய சிலைகளை திறந்துவிட்டோம். சிலைகளின் கீழ் உள்ள பெயர் பலகை மட்டும் மூடி வைக்கப்பட்டுள்ளது. சிலைகளை மூடுவது தொடர்பான உரிய தகவல்கள் சரியாக வெளியிடப்படாததால் குழப்பத்தில் இருக்கிறோம். இதை தேர்தல் ஆணையம் தான் தெளிவுப்படுத்த வேண்டும்’ என்றனர்.
வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை நேற்று முன்தினம் துணியால் மூடப்பட்டது. அடுத்தபடம்: மூடிய எம்ஜிஆர் சிலை நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.

Tags : Vallore ,
× RELATED வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்...