×

30 சதவீதம் கூடுதலாக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள் கண்காணிப்பு தேர்தல் ஆணையத்துக்கு தினமும் அறிக்கை தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி

வேலூர், மார்ச் 1: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி வழக்கத்தை விட கூடுதலாக 30 சதவீதம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சி தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் குஷிப்படுத்துவதற்கு, வேட்பாளர்கள் மதுவகைகளை வாங்கி கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க முக்கிய தலைவர்கள் வந்தால், தொண்டர்களுக்கு கிடா விருந்து, மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனை நடக்கிறது. எனவே தேர்தல் நடத்தை விதிமீறி வாக்காளர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்குவதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் டாஸ்மாக் விற்பனை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் இதற்கு முன்பு எவ்வளவு சரக்கு விற்பனையானது? தற்போது எவ்வளவு விற்பனையாகிறது? என்பது குறித்து தினந்தோறும் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒவ்வொரு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வழக்கத்தைவிட கூடுதலாக 30 சதவீதம் விற்பனை நடைபெறும் கடைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனை அறிக்கை தயார் நிலையில் வைக்கப்படும். வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரசாரம் நேரத்தில் இந்த அறிக்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் நடைபெறும் விற்பனை விவரங்களும் மறுநாள் காலையில் அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும் தேவைக்கு அதிகமாக யாராவது மது பாட்டில்களை வாங்கிச் சென்றால், உடனடியாக தகவல் அளிக்க டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் மதுபாட்டில்கள் வாங்கிச் செல்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தால், உடனடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Electoral Commission ,Tasmac Stores ,TN Legislative Elections ,
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...