×

தமிழகத்தில் 15,823 மையங்களில் முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வு இயக்குனர் தகவல் வயது வந்தோர் கல்வி திட்டத்தில் வரும் 27ம் தேதி

வேலூர், மார்ச் 1: வயது வந்தோர் கல்வி திட்டத்தில் வரும் 27ம் தேதி தமிழகத்தில் 15,823 மையங்களில் முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடக்க உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கினை அடிப்படையாக கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாத 3.10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கற்போம், எழுதுவோம் இயக்கத்தின் சார்பில் 15,823 கற்போர் எழுத்தறிவு மையங்களில், தன்னார்வல ஆசிரியர்களின் உதவியுடன் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கற்போம்-எழுதுவோம் இயக்கத்தின் படி அடிப்படை எழுத்தறிவு கற்றல் செயல்பாடுகளான வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்கீடுகள் ஆகிய பணிகளில் அனைத்து திட்ட கற்போரும் 120 மணி நேர கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கற்றல் பகுதிகளில் முழுமையான அடைவை பெற்ற கற்போர் அனைவரும் இறுதி மதிப்பீட்டு தேர்விற்கு தகுதி பெறுவர்.

அந்த வகையில், அனைத்து மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 15,823 கற்போர் எழுத்தறிவு மையங்களில் இந்த திட்டத்தின் முதற்கட்ட பேட்ச், அடிப்படை எழுத்தறிவுக் கல்விச் செயல்பாடுகளில் கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கற்போரும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாடத்திட்ட கால அட்டவணையின்படி 120 மணி நேரம் முழுமையான கற்றல் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அவர்களுக்கு இறுதி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் டிஎன் எமிஸ் ஆப்பில் தங்கள் மாவட்டத்தில் ஒவ்வொரு மைய அளவில் அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட கற்போரின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் வருகை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மாநில சராசரி 60 சதவீதம் என தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கற்போர் வருகை 50 சதவீதத்திற்கு கீழ் உள்ளது என்று அறியப்பட்டுள்ளது. எனவே தங்கள் மாவட்டத்தில் ஒரு கற்போர் மையத்திற்கு 40 கற்போர் எனக் கொண்டு ஒவ்வொரு கற்போர் எழுத்தறிவு மையத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து கற்போர்களும் நூறு சதவீதம் வருகைபுரிந்து 120 மணி நேர கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறுள்ள அனைத்து கற்போருக்கும் வருகிற 27ம் தேதி முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்படும். 120 மணி நேர கற்றல் செயல்பாடுகளை வரும் 26ம் தேதி வரை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...