சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு காபந்து அரசாகவே செயல்பட்டு வந்தன. இந்த காலக்கட்டத்தில் அனைத்து அறிவிப்புகள், அதிகாரிகள் பணியிடமாற்றம் போன்றவை தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்படுவது வழக்கமான மரபாகும்.
அதன்படி, தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகின. விஜய் தலைமையிலான புதிய அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின. மேலும், தேர்தல் ஆணையமும் தேர்தல் நடந்தை விதிகளை கடந்த 7ம் தேதி திரும்ப பெற்றுக்கொண்டன. இந்தநிலையில் புதிய ஆட்சியின் முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே பத்திர பதிவுத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் குறித்தான உத்தரவை அத்துறையின் தலைவராக செயல்பட்டு வரும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட பின் புதிய அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர் தான் அரசாணையாகவோ அல்லது பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவை அந்த அரசின் சார்பில் வெளியிடப்படும். ஆனால், மூன்றாண்டுகளாக தொடர்ந்து பதிவுத்துறைத்தலைவராக பணியாற்றிவரும் அதன் தலைவரான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் புதிய ஆட்சி பொறுப்பு ஏற்பதற்குள் பலருக்கும் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து, பசையான பதவியில் அமர்த்திவிட்டு செல்ல தன்னிச்சையாக முடிவெடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை வழங்கியும் பலரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்திருப்பதாகவும் பத்திரப்பதிவு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 746 பேருக்கு இளநிலை உதவியாளர் பதவி, சென்னை, கோவை உட்பட 35 பேருக்கு சார்பதிவாளர் பணி மாறுதல் மட்டுமின்றி, தன்னுடைய தட்டச்சர் உதவியாளருக்கும் பதவி உயர்வை வழங்கி உள்ளார். இந்த பதவி உயர்வு உத்தரவில் எந்தவித சீனியாரிட்டியும் பின்பற்றாமல், இட ஒதுக்கீட்டு வரம்பை மீறியும் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாகவும், உடனடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரியும் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
