சென்னை: தொடர்ந்து 11 முறை தோல்வி எதிரொலியாக எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் 29 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற கட்சி தலைவராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடியும் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அந்த கட்சியால் எதிர்க்கட்சியாக கூட ஆக முடியவில்லை. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கட்சியினரிடையே விவாத பொருளாகியுள்ளது. இதனால், தற்போது அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் பெரும் புயலை கிளப்ப தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக 11 தோல்விகளை சந்தித்துள்ளது. இது கட்சி நிர்வாகிகளிடமும், அடிமட்ட தொண்டர்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இதில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக சிலர் குற்றம் சுமத்தினர். பின்னர் இந்த கூட்டம் நிறைவடைந்தது. எனவே அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் ஒன்று கூடினர். அங்கும் ஆலோசனை நடந்தது. அதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராக சிலர் பேசியதாக கூறப்படுகிறது. அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போர்க்கொடி தூக்கியுள்ள எம்எல்ஏக்கள் அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதிமுகவின் மொத்தமுள்ள எம்எல்ஏக்களில் 29 சட்டமன்ற உறுப்பினர்களில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால் அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சட்டவிதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. இதனால் இந்த 29 உறுப்பினர்களே ‘‘உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை இழக்காமல் தவெக ஆட்சியமைக்கப் பலம் சேர்க்க முடியும். இந்தநிலையில் அந்த 29 எம்எல்ஏக்களுடன் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் விடிய விடிய ஆலோசனை நடத்தினர். இதில் நத்தம் விஸ்வநாதன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ேக.சி.வீரமணி, இசக்கி சுப்பையா, அருள்மொழி தேவன், திருத்தணி அரி, ராஜசேகர், ரவி, என்.எஸ்.ஆன் நடராஜ், ஜெயக்குமார், சுகுமார், தீலிபன், மரகதம் குமரவேல், லீமா ரோஸ், சத்யபாமா, மரகதம் வெற்றிவேல், ஹரி பாஸ்கர், ராகேஸ், மோகன், சம்பத் குமார், பாலகிருஷ்ணா ரெட்டி, முக்கூர் சுப்பிரமணியன், ராஜேந்திரன், பழனிசாமி ஆகிய 29 பேர் கலந்து கொண்டனர்.
இதில் எடப்பாடிக்கு பதிலாக எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஆக்குவது என்பது முடிவு செய்யப்பட்டது. முதலில் சட்டமன்ற கட்சியை கைப்பற்றுவது. பின்னர் கட்சியை கைப்பற்றுவது என்று திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தனக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் எடப்பாடி அதிர்ச்சியில் உள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று காலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அதிமுகவில் தற்போது புதிய அணி உருவாகியுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் அதிமுக உடையாமல் இருக்க பதவியை ராஜினாமா செய்யலாமா? என்பது குறித்தும் எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் மறுபுறம் சி.வி.சண்முகம் வீட்டிலும் எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
