சத்தியமூர்த்தி பவனுக்கு திடீர் வரவு; பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி தள்ளுமுள்ளால் தடுமாறிய ராகுல்காந்தி: கட்சி பொறுப்பாளர்களுக்கு டோஸ் விட்டதால் பரபரப்பு

 

சென்னை: சத்திய மூர்த்தி பவனுக்கு வருகை தந்த ராகுல் காந்தியின் பாதுகாப்பு குளறுபடி காரணமாக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களை ராகுல் காந்தி வறுத்தெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வென்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தனிபெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வந்த விஜய் இறுதியாக காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் தயவில் ஆட்சியை கைப்பற்றிய சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வாரா என பல கேள்விகள் எழுந்த நிலையில் அவர் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் காங்கிரஸ்காரர்களையும் இந்த நிகழ்வு உற்சாகத்தை ஏற்படுத்தின.

இந்த பதவியேற்பு விழாவிற்கு பின், 9 ஆண்டுகளுக்கு பிறகு ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல் வந்தார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் திட்டங்களை வகுத்திருந்தனர். இதற்கான ஒத்திகை நிகழ்வும் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது. இருப்பினும் எதிர்ப்பார்க்கப்பட்டதை மீறி தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவனில் குவிந்ததால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

ராகுலை காரில் இருந்து இறங்கவிடாமல் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் காமராஜ் மற்றும் கக்கன் போன்ற தலைவர்களுக்கு ராகுல் காந்தி மாலை அணிவிப்பதாக இருந்த திட்டமும் கைவிடப்பட்டு நேராக தலைமை அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக எரிச்சல் அடைந்த ராகுல் காந்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட மூத்த தலைவர்களை கடுமையாக சாடினார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குளறுபடி காரணமாக, 500 தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரை நிகழ்த்த தயார் செய்யப்பட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு அவர் கோபத்துடன் கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: