சிவகங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்திய ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்: சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்

 

திருவாடானை: சிவகங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு இரண்டு சொகுசு கார்களில் கஞ்சா மூட்டைகள் கடத்துவதாக சிவகங்கை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகங்கையில் இருந்து புறப்பட்ட சம்பந்தப்பட்ட சொகுசு கார்களை கியூ பிராஞ்ச் போலீசார் ரகசியமாக பின்தொடர்ந்தனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல்காரர்கள், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி நோக்கி அதிவேகமாக சென்றனர்.

சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் இசிஆர் சாலையில் கார்களை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றனர். போலீசாரும் அவர்களை விடாமல் துரத்திச் சென்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த பரபரப்பான சேஸிங்கிற்கு பிறகு, திருவாடானை கடற்கரை கிராமமான வட்டாணம் அருகே வைத்து போலீசார் ஒரு காரை லாவகமாக மடக்கி பிடித்தனர். மற்றொரு கார் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி குறுக்கு வழியில் அஞ்சுகோட்டை நோக்கிச் சென்றது.

விடாமல் துரத்திய போலீசார் அந்த காரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். போலீசாரை கண்டதும் 2 கார்களிலும் இருந்த கடத்தல்காரர்களும் இறங்கி தப்பியோடிவிட்டனர். கார்களை போலீசார் சோதனையிட்டபோது, சாக்கு மூட்டைகளில் சுமார் 300 கிலோ கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கார்கள், கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த கஞ்சா மூட்டைகள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: