துபாய்: ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவின் தடையை மீற முயன்ற ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த மாதம் 8ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில் ஓமன் வளைகுடாவில் கடல்வழித் தடையை மீறி ஈரானியத் துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற இரண்டு ஈரானிய எண்ணெய் டாங்கர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்த தடைகளை மீறி ஈரான் துறைமுகத்தை நோக்கி அந்த கப்பல்கள் சென்றது. அப்போது கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் துப்பாக்கிசூடு நடத்தியது என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
* பஹ்ரைனில் 41 பேர் கைது
ஈரான் புரட்சிகர காவல் படையினருடன் தொடர்பு வைத்திருந்த 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் நேற்று தெரிவித்தது. ஈரான் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஹ்ரைன் எச்சரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அந்த நாடு வெளியிடவில்லை.
