சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த 4 நாட்களாக தங்கிருந்த புதுச்சேரி ரிசார்ட்டை காலி செய்துவிட்டு சென்னை வந்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, ‘தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்து’ தெரிவித்தார். இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போட்டியில் இருந்து அதிமுக விலகிக்கொண்டது.
அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் தவெக கட்சிக்கு தாவி விடக்கூடாது என்பதாலும், தவெகவினரின் குதிரை பேரத்தை தடுக்கவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள திஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் கடந்த 6ம்தேதி இரவு முதல் தங்க வைக்கப்பட்டனர். இதன்பின்னர் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பக்கத்தில் உள்ள ஆர்கேஎன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுடன் இரண்டு நாட்களுக்கு முன் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். நேற்று முன்தினம் சென்னை வரச்சொல்லி அதிமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவு வந்தது. எம்எல்ஏக்கள் புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் வர வேண்டாம் என கூறிவிட்டதால் நேற்று முன்தினம் இரவும் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டிலே தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து எம்எல்ஏக்களும் சென்னைக்கு வரச்சொல்லி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உத்தரவிட்டதால் எம்எல்ஏக்கள் விடுதிகளை காலி செய்துவிட்டு சென்னை வந்தனர். காலை 10.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தனர்.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அதிமுக எதிர்பார்க்காத திருப்பமாக தவெக தான் ஆட்சி அமைக்கும் என்ற உறுதியாக தகவல் எடப்பாடி அணியினருக்கு கிடைத்தது. இதனால் அனைவரும் சோர்வடைந்தனர். இவ்வளவு நாள், புதுச்சேரியில் பதுங்கி இருந்தும், அதிமுகவுக்கு எந்த பங்கும் இல்லாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்பட்டனர். பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்து, அவரவர் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்தனர்.
எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில், பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.
