சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது 234 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவானது.
இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க போலி கடிதங்களை சமர்ப்பித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்த குற்றச்சாட்டு மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதாவது மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி ஒரு கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதே இந்தப் பிரச்சனைக்கு மூலகாரணம். ஆளுநர் மாளிகை வளாகத்தில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், தவெகவை ‘ராவணன்’ செயலோடு ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். தவெகவின் இந்த போர்ஜரி சம்பந்தமாக காவல் நிலையத்தில் அமமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மாற்றத்தை எதிர்நோக்கிய தமிழக அரசியலில், ஆட்சி அமைப்பதற்கு முன்பே அரங்கேறும் இந்த ‘கடிதப் போர்’ பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதை சுட்டிக் காட்டி திமுக எம்பி பி.வில்சன் தனது எக்ஸ் தளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது.
