பாஜ என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு? பாசிச பாயசம் இனிப்பதாலா? விஜய்க்கு திமுக ஐடி விங்க் சரமாரி கேள்வி

 

சென்னை: பாஜ என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு, பாசிச பாயசம் இனிப்பதாலா என்று விஜய்க்கு திமுக ஐடி விங்க் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது. தலா 2 இடங்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தவெக கூட்டணியின் பலம் 116 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் கடிதம் வழங்கினார். ஆனால், ‘ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உறுதிபட தெரிவித்தார். மூன்று முறை கவர்னரை விஜய் சந்தித்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை. கடைசியில் விசிகவும் முஸ்லீம் லீக்கும் ஆதரவு கொடுத்ததால் 120 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை பெற்று விஜய் இன்று முதல்வராக பதவி ஏற்கிறார்.

முன்னதாக, கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் இருப்பதற்கு திமுக உள்பட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், விஜய்யின் தவெக கவர்னரின் செயலை கடைசிவரை விமர்சிக்காமலேயே இருந்து வந்தது. இதுகுறித்து தவெகவை திமுக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவின் ஐடி விங்க் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

புதிய அரசு அமைக்க நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினமே ஆளுநரை வலியுறுத்தி இருக்கிறார். “நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிக்கிறேன்” என்று கூட்டணி கட்சிகளையும் அழைத்து சொல்லி விட்டார். இன்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரும் குதிரை பேர தவெக இதுவரை எதற்காக ஆளுநர் குறித்தோ பாஜ குறித்தோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. பாசிச பாயசம் இனிப்பதாலா?. எங்கள் தலைவர் தெளிவாக சொன்ன பிறகும் குதிரை பேரம் எதற்கு?. பாஜ என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு?.இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Related Stories: