காலிப்பணியிடம் நிரப்ப கோரி ஏப்.16ம் தேதி ஆர்ப்பாட்டம் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் முடிவு

கரூர், மார்ச் 1: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் குமார் துவக்க உரையாற்றினார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மண்டல செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை தவிர்த்து அரசே ஏற்று நடத்த வேண்டும். அனைத்து நிலை ஊழியர்களுக்கும், பதவி உயர்வுக்கான தேர்வு பெயர் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்பட்டு, முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். கோட்டக் கணக்கர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையின் மிக முக்கிய பணியிடமான இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் முற்றிலும் காலியாக உள்ளதால் இதனை உடன் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிகழ்வாக அவர்களிடம் இருந்து விருப்ப கட்டித்தினை பெற்று உடன் பணிநியமனம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 16ம்தேதி அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மே 19ம்தேதி சென்னையில் பெருந்திரள் முறையீடு இயக்கும் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: