சட்டத்தின் மாண்பை காக்க வக்கீல்களுக்கு எதிராக துணிவாக செயல்பட்டார் இளம்நீதிபதி: ஐகோர்ட் கிளை பாராட்டு

 

மதுரை: சட்டத்தின் மாண்பை காக்க வக்கீல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட இளம் நீதிபதியை ஐகோர்ட் கிளை பாராட்டியுள்ளது. மதுரை ஜேஎம் 5வது மாஜிஸ்திரேட் லட்சுமி ப்ரியா முன்பு போலீசார் ஒருவரை ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என்றும், குறிப்பிட்ட ஒரு மனுவை முதலில் விசாரணைக்கு எடுக்க வேண்டுமெனவும் கூறி, சில வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தனது நீதிமன்ற நடவடிக்கையின் மாண்பை குலைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் நடந்து ெகாண்டதால், எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட இச்சம்பவத்திற்கு மாஜிஸ்திரேட் நோட்டீஸ் அனுப்பியது சட்டப்படி செல்லாது என்றும், இந்த விவகாரத்தை சுமுகமாக பேசி தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை பொறுத்தவரை, ஒரு இளம் பெண் நீதிபதி வழக்கறிஞர்களின் வயது, அந்தஸ்து அல்லது அனுபவம் எதையும் பொருட்படுத்தாமல், வசதியான பாதையைத் தேர்ந்தெடுக்காமல், தனது மனசாட்சிக்கு உட்பட்டு சரியான பாதையை தேர்ந்தெடுத்ததை இந்த நீதிமன்றம் காண்கிறது.

பதற்றமான சூழலிலும், பலதரப்பட்ட அழுத்தங்களும் இருந்தபோதிலும், அவர் தற்காலிக ஆதாயங்களுக்காகப் பணியவில்லை. அல்லது மவுனமாக பின்வாங்கவில்லை. கண்ணியத்தையும், அதிகாரத்தையும் நிலைநிறுத்த அவர் உறுதியாக செயல்பட்டார். வழக்கறிஞர்களின் அனுபவம் அல்லது பதவியைக் கண்டு அஞ்சாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கத் துணிச்சலுடன் செயல்பட்ட இளம் நீதிபதியான லட்சுமி ப்ரியாவின் உறுதியை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் எதிரிகள் அல்ல. இருவரும் நீதித்துறையின் இரு தூண்கள். ஆனால், வழக்கறிஞர்கள் நீதிமன்ற அதிகாரத்தை மீறி அழுத்தம் கொடுக்க முயன்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தை மிரட்ட முடியாது. மாவட்ட நீதித்துறை என்பது நமது நீதி வழங்கல் அமைப்பின் முதுகெலும்பாகும்.

சாதாரண குடிமகன் முதலில் அணுகுவது இந்த நீதிமன்றங்களைத் தான். எனவே, இதன் மாண்பைக் காப்பது மிக முக்கியம். நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பது வழக்கறிஞர்களின் கடமையாகும். நீதிபதியை அச்சுறுத்துவதோ அல்லது ஒரு குறிப்பிட்ட உத்தரவைப் போடச் சொல்லி வற்புறுத்துவதோ வழக்கறிஞர்களின் தொழில்முறை உரிமையாகக் கருத முடியாது. நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் போன்ற முதற்கட்ட ஆதாரங்கள் உள்ள நிலையில், இந்த கட்டத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், மதுரை 5வது மாஜிஸ்திரேட் லட்சுமி ப்ரியாவின் அச்சமின்மை, நேர்மை மற்றும் நீதித்துறை கடமை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இத்தகைய தரம் வாய்ந்த அதிகாரிகள் நீதித்துறையின் விலைமதிப்பற்ற சொத்துக்கள். மனுநீதி சோழன் வாழ்ந்த இந்த மண்ணில் காலத்தால் அழியாத நீதியின் மரபினை ஏந்திச் செல்லும் தகுதியான வாரிசுகள்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: