மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு பூட்டு

சிவகாசி, மார்ச் 1: சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டது. எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சாவி வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் மாநில அரசுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தொடங்கியுள்ளது.

சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் கிழித்து அகற்றி வருகின்றனர். முறையாக அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பேனர்களும் அகற்றப்படுகின்றன. புதிதாக பேனர்களை வைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டு அதன் சாவி வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி தினேஷ்குமார் கூறுகையில், ``சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பாக  எழுதப்பட்ட விளம்பரங்கள் 24 மணி நேரத்தில் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  சுவரொட்டி, பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். நகராட்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கூட தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. கிராமப்பகுதியில் தேர்தல் விளம்பரங்கள் உரிய அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். தேர்தல் காலங்களில் விதிகளை யாராவது மீறினால் அது தொடர்பான புகார்கள் ஆதாரத்துடன் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அன்னம்மாள், சரவணன் கலந்து கொண்டனர் இதில் திருவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு தாலுகா பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சட்டமன்ற தொகுதியில் அரசு அலுவலக கட்டிடங்கள் பொது இடங்கள் தனியார் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டு அனுமதி பெறாமல் இருந்த சுவரொட்டிகள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை உடனடியாக விரைந்து அழிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். அப்போது தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டங்கள்   மற்றும் பேரணிகள்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன் அனுமதி  பெற நடைமுறையை எளிதாக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் அரசியல்கட்சி சார்ந்த பதாகைகள், சுவரோவியங்கள், கொடிக்கம்பங்கள்  தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் அகற்றப்பட்டன. ன.விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய  நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் தாசில்தார் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

திருச்சுழி

திருச்சுழி தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக திருச்சுழி தாசில்தார் சிவக்குமார், காரியாபட்டி தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சுழி, நரிக்குடி, ரெட்டியாபட்டி உட்பட அனைத்து பகுதிகளிலும் அரசியல் சார்ந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: