அறந்தாங்கி, மே 9: அறந்தாங்கி சுற்று வட்டாரபகுதியில் திடீர் மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயில் என்பது கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கியுள்ளது. இதனையொட்டி சாலைகளில் நடமாடும் பொது மக்கள் குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் துவங்கி நடைபெற்றுவருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் தினந்தோறும் 98 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் நகர பகுதியில் உள்ள சாலைகளில் மழை தண்ணீர் தேங்கியது.
