×

மகா மாரியம்மன் கோயில் திருவிழா

 

 

ஓமலூர், மே 9: ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பாரம்பரிய ‘புலி வேட்டை’ மற்றும் பொங்கல் வைபவம் நேற்று நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மாவிளக்கு எடுத்தும், அக்னி கரகம் மற்றும் பூங்கரகம் ஏந்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, மகா மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. கால்நடைகளுக்கு நோய்கள் வராமல் காக்க வேண்டி, ஆடு மற்றும் மாடுகளை கோயிலுக்கு நேர்ந்து விடும் நிகழ்வு நடைபெற்றது.
திருவிழாவின் ருசிகர நிகழ்ச்சியாகக் கருதப்படும் புலி வேட்டை நடைபெற்றது. இதில், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பழனிகவுண்டர் புலி வேடமிட்டு, கிராமங்கள் வழியாக ஆக்ரோஷமாக கோயிலை சுற்றி வலம் வந்து புலி வேட்டை நடத்தினார். கோயில் வளாகத்தில் மலையாக கருதப்படும் உயரமான பாக்கு மரம் நடப்பட்டு, அதில் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த மரத்தடியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை, புலி வேடமிட்டவர், தனது வாயால் கவ்விப் பிடித்தார். பின்னர், ஆட்டை வாயிலேயே கவ்வியபடி மளமளவென பாக்கு மரத்தின் உச்சிக்கு ஏறிச்சென்றார். அங்கு ஆட்டின் கழுத்தை கடித்து வேட்டையாடி, மரத்தின் மேலிருந்து கீழே தள்ளும் பாரம்பரிய நிகழ்வு அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியை காண காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, மகா மாரியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Maha Mariamman Temple Festival ,Omalur ,Maha Mariamman Temple ,Kamalpur ,Ecoil festival ,Tiger Hunt ,Pongal Waipavam ,
× RELATED சேலம் மாவட்டத்தில் 3 நாட்களில் 14 டாஸ்மாக் கடைகள் மூடல்