×

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரத்தை எதிர்த்த மனுக்கள் அதிரடி தள்ளுபடி

 

மதுரை: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரத்தை எதிர்த்த மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சார வாரியத்தில் குழி தோண்டுதல், மின்கம்பிகள் அமைத்தல், பழுது நீக்குதல் போன்ற அத்தியாவசியப் பணிகளில் கடந்த 1998 முதல் 2014 வரை ஒப்பந்த பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள், தங்களுக்கு, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுத் தொழிலாளர் ஆய்வாளர் பணியாளர்களுக்கு நிரந்தர பணியாளர் அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து மின்சார வாரியத்தின் சார்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மின்சார வாரியத்தின் சார்பில், ‘‘ஒப்பந்த தொழிலாளர்கள் நேரடியாக வாரியத்தால் பணியமர்த்தப்படவில்லை. அவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலமே நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் கோரும் தொழிலாளர்கள் தொழிலாளர் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். தொழிலாளர் ஆய்வாளருக்கு இதற்கு அதிகாரம் இல்லை. இவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதால், பணி நிரந்தரச் சட்டத்தின் கீழ் இவர்களுக்குப் பலன் கிடைக்காது’’ என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘பணி நிரந்தர சட்டத்தின் படி, ஒரு தொழிலாளி 480 நாட்கள் பணியாற்றினாரா என்பதை ஆய்வு செய்து அவருக்குப் பணி நிரந்தரம் வழங்கத் தொழிலாளர் ஆய்வாளருக்கு முழு அதிகாரம் உண்டு. தொழிலாளர்கள் மேற்கொண்ட குழி தோண்டுதல், மின் கம்பம் நடுதல் போன்ற பணிகள் கட்டுமானப் பணிகள் அல்ல. அவை மின்வாரியத்தின் நிரந்தரமான மற்றும் அத்தியாவசியப் பணிகள் ஆகும்.

இதேபோன்ற சூழலில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்களுக்கும் அதே பலனை வழங்குவது அவசியமானது. மின்சார வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனக் கூறி, தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணி நிரந்தர உத்தரவுகள் உறுதி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

Tags : Electricity Board ,Madurai ,Court ,Theni ,Thoothukudi ,Virudhunagar ,Dindigul ,
× RELATED பிற கட்சிகளுக்கு தாவாமல் இருக்கும்...