குமரியில் இன்று ராகுல்காந்தி பிரசாரம் 9 இடங்களில் பேசுகிறார்

நாகர்கோவில், மார்ச் 1: குமரி மாவட்டத்தில் இன்று (1ம் தேதி) ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டு 9 இடங்களில் பேசுகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் மூன்றாம் கட்டமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். பிப்ரவரி 27ம் தேதி தூத்துக்குடியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் நெல்லை, தென்காசியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு இன்று (1ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தருகிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் உள்ளிட்ட தேசிய, மாநில தலைவர்கள் பலரும் வருகை தருகின்றனர்.

முன்னதாக இன்று தென்காசியில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் காலை 9.45 மணிக்கு வந்து சேரும் அவருக்கு கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியில் குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து காலை 10.45 மணிக்கு ராகுல்காந்தி கார் மூலம் புறப்பட்டு 11 மணிக்கு அகஸ்தீஸ்வரத்தில் முன்னாள் எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார். 11.30 மணிக்கு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இந்திராகாந்தி சிலை அருகே ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

பகல் 12.20 மணிக்கு தக்கலையில் காமராஜர் சிலை பகுதிக்கு வரும் அவர் அங்கு வரவேற்புக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசுகிறார். பகல் 1 மணிக்கு முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வரும் அவர், அங்கு பிற்பகல் 2.20 மணி வரை மாணவ மாணவியருடன் கலந்துரையாடுகிறார். 2.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு குளச்சல் செல்கிறார். குளச்சல் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை அருகே ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 3.15 மணிக்கு அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 3.30 மணிக்கு கருங்கல் வரும் அவருக்கு ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாலை 4 மணி வரை அங்கு ரோடு ஷோவில் பங்கேற்று பேசும் அவர் மாலை 4.20 மணிக்கு தேங்காப்பட்டணம் துறைமுகம் அருகேயுள்ள பரக்காணி பகுதியில் மீனவர்களுடன் படகு ஊர்வலத்தில் பங்கேற்று அவர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 5.45 மணிக்கு களியக்காவிளை வந்தடைகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 6.05 மணிக்கு களியக்காவிளையில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைகிறார். இரவு 10.05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி வருகைக்கான ஏற்பாடுகளை குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாநில துணை தலைவர் வக்கீல் ராபர்ட்புரூஸ், மாநில பொதுசெயலாளர் விஜய் வசந்த், எம்.எல்.ஏ பிரின்ஸ் உட்பட நிர்வாகிகள் பார்வையிட்டு செய்துள்ளனர்.

Related Stories: