பா.ஜ மாவட்ட தலைவர் காரிலிருந்து கொடி அகற்றம்

நாகர்கோவில், மார்ச் 1: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 18 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பறக்கும் படையினர் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வாகனங்கள் சோதனை நடத்தப்படுகிறது. நாகர்கோவில், பார்வதிபுரம் அருகே நேற்று காலையில் பறக்கும் படையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பாஜ மாவட்டத் தலைவர் தர்மராஜ் கார் வந்து கொண்டிருந்தது. அவரது காரில் கட்சி கொடி காணப்பட்டது. அதனை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கொடி அகற்றப்பட்ட நிலையில் அங்கிருந்து கார் புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து அந்த பகுதியில் வந்த வாகனங்களையும் அதிகாரிகள் தடுத்து  நிறுத்தி சோதனை நடத்தினர்.

Related Stories: