சின்னமனூரில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் பொதுமக்கள் அதிர்ச்சி

சின்னமனூர், மார்ச் 1: சின்னமனூரில் கழிவுநீர் கலந்து குடிநீர் சிகப்பு கலரில் வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன; சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, வேம்படிகளம் முல்லைப் பெரியாற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து தண்ணீரை உழவர் சந்தை அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கோண்டு வருகின்றனர். இங்கு தண்ணீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்கின்றனர். இந்நிலையில், 3வது வார்டில் உள்ள சாமிகுளத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சாமிகுளம் பகுதியில் குடிநீர் குழாயை திறந்தால், தண்ணீர் சிகப்பு கலரில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து சின்னமனூர் நகராட்சியில் தகவல் தெரிவித்ததற்கு, அவர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து, குடிநீரில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும், இப்பகுதியில் ஆடு, கோழி கடைகள் அதிகமாக இருப்பதால் குடிநீருடன் இறைச்சிக் கழிவுநீரும் கலப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். எனவே, சாமிகுளம் பகுதியில் பாதாளச் சாக்கடை உடைப்புகளை சீரமைத்து, தூய்மையான குடிநீரை வழங்க, நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: