2024-ல் இந்திய பெருநகரங்களில் அதிகபட்ச தற்கொலை உயிரிழப்புகள் டெல்லியில் பதிவு..!

டெல்லி: தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டில் டெல்லியில் 2,905 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது இந்தியாவின் 53 பெருநகரங்களில் மிக உயர்ந்தது ஆகும். டெல்லியை அடுத்து 2,403 தற்கொலை சம்பவங்களுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பை 1,406 தற்கொலை சம்பவங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தலைநகர் டெல்லியில் தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் என்றும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்பம் சார்ந்த பிரச்சனைகளே முக்கிய காரணமாக இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டு உள்ளது. இது நகர்ப்புறங்களில் மன அழுத்தம், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள், நிதி நெருக்கடிகள் மற்றும் மனநல சவால்கள் அதிகரித்து காணப்படுவதை உணர்த்துவதாக அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில், டெல்லியில் தற்கொலை விகிதம் 1 லட்சம் பேருக்கு 13.2 என்ற அளவில் பதிவாகியுள்ளது. பெங்களூருவில் தற்கொலை விகிதம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 16.7-ஆகவும், மும்பையில் ஒரு லட்சம் மக்களுக்கு 11 தற்கொலைகள் என்று அளவிலும் பதிவாகியுள்ளன.

எனினும் 2024-க்கு முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் டெல்லியில் தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் டெல்லியில் 3,417 தற்கொலைஉயிரிழப்புகளும், 2023-ஆம் ஆண்டில் 3,131 தற்கொலை உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணமாக குடும்பப் பிரச்சினைகளே தொடர்ந்து இருந்து வருவதாக NCRB தரவுகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு அடுத்தபடியாக தற்கொலைக்கான காரணங்களாக உடல்நலக்குறைவு, போதைப்பொருள் பயன்பாடு, திருமணம் சார்ந்த சிக்கல்கள், காதல் விவகாரங்கள் மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகியவை அமைந்துள்ளன.

அதே போல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கவலையளிக்கும் வகையிலேயே உள்ளன.2024-ஆம் ஆண்டில் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 7,827 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக NCRB தரவுகள் தெரிவிக்கின்றன. பல சம்பவங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்ததை இப்புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த ஆண்டில் டெல்லியில் 1,058 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: