கொரோனாவிற்காக நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் கொல்லபட்டி மக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம், மார்ச் 1:  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லபட்டிக்கு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு மற்றும் மினி பஸ்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லபட்டி, குட்டில்நாயக்கன்பட்டி, பெயில்நாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொல்லபட்டி பகுதிக்கு அரசு பஸ் காலை, மாலை என இருவேளைகளிலும், மற்ற நேரங்களில் மினி பஸ்சும்  இயக்கப்பட்டது.

கொரோனா காலத்திலிருந்து இப்பகுதிக்கு எந்த பஸ்களும் இயக்கப்படுவதில்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கும், மார்க்கெட் செல்வதற்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்கள் இயக்காததால் பெரும் கால தாமதத்திற்கும், பொருளாதார ரீதியில் இழப்பும் ஏற்பட்டு, பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் பஸ்வசதி இல்லாததால் ஆட்டோ மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டன்சத்திரம் நகருக்கு வந்து செல்கின்றனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கொல்லபட்டி பகுதிக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ் மற்றும் மினி பஸ்களின் சேவைகளை தொடர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: