பிளாட்பாரங்களை ஆக்கிரமிக்கும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் பழநியில் வாகன ஓட்டிகள் அவதி

பழநி, மார்ச் 1: பழநி காந்தி மார்க்கெட்டில் பிளாட்பாரங்களை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். பழநி காந்தி மார்க்கெட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. இந்த மார்க்கெட் சாலையின் இரு புறமும் சுமர் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றின் ஓரம் பொதுமக்கள் நடந்து செல்ல நகராட்சி சார்பில் நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இப்பாதைகள் பெரும்பாலும் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் தேங்காய், கீரை மற்றும் பழ வகைகளை விற்பனை செய்து கொள்ள சிறு வியாபாரிகளுக்கு, கடைக்காரர்கள் உள்வாடகை வசூலித்து வருகின்றனர். இதனால் காந்தி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தற்போது சாலைகளிலேயே நடந்து சென்று வருகின்றனர். இதுபோல் மார்க்கெட்டிற்கு வரும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க பிளாட்பராரத்தை ஒட்டி இரு சக்கர வாகனங்கள் நிற்கும் வகையில் வெள்ளைக்கோடு போட்டு அடையாளப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடைக்காரர்கள் தங்களது கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்த முடியாத வகையில் தங்களது இருசக்கர வாகனத்தை குறுக்கு நெடுக்கமாக நிறுத்தி விடுகின்றனர்.  மேலும், சாலையின் நடுவில் இரும்பு கம்பிகளை போட்டு வைத்து விடுகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் தடுக்கி விழுந்து காயமடையும் சூழல் அடிக்கடி நடந்து வருகிறது. அதுபோல், கடைக்காரர்கள் வாகனங்களை குறுக்கு நெடுக்குமாய் நிறுத்தி விடுவதால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்திச் சென்று விடுவதால் இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த ஹரி கூறியதாவது: கடைக்காரர்கள் வாகனங்களை குறுக்கு நெடுக்குமாக நிறுத்துவதாலும், சாலைகளில் இரும்பு கம்பிகளை போடுவதாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுபோன்ற கடைக்காரர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: