நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் தனிநபர் விமர்சனம் கூடாது: தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாடு

வத்தலக்குண்டு, மார்ச் 1: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் பிரபாகர் தலைமையில், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் சுப்பையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிலக்கோட்டை தொகுதி தேர்தல் அலுவலர் பிரபாகரன் பேசியதாவது: அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஜாதி, மதம், மொழி, இன வேறுபாட்டை உருவாக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிக்கும்போது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால பணிகள் பற்றி மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும்; மாறாக தனிநபர் விமர்சனம் செய்தல் கூடாது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி வளாகங்களில் ஆகிய இடங்களில் வேட்பாளர் கட்சி அலுவலகங்களை அமைக்கக்கூடாது. அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது’ என்றார்.

திமுக மாவட்ட பொறுப்பாளர் அழகர்சாாமி பேசுகையில், ‘தேர்தல் ஆணையம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. இந்த ஓட்டு எவ்வாறு 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவது குறித்து விளக்கம் அளிக்கவும். இதற்கு பதிலளித்த தாசில்தார் சுப்பையா கூறியதாவது: தேர்தல் ஆணையம் மிகவும் தெளிவாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கு, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மிகத்தெளிவாக அதிகாரிகள் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் முன்னிலையில் தபால் ஓட்டுக்கள் பெற்றுக்கொள்வார்கள்’ என்றார். இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிமியோன்ராஜ், ஜேசுராஜ், தேமுதிக ஒன்றியச் செயலாளர்கள் கருத்தபாண்டி, பழனி, திமுக ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், சௌந்தரபாண்டியன், தேமுதிக நகர செயலாளர்கள் சவுந்தரபாண்டியன், அல்ட்ரா சுரேஷ், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகி கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>