பொங்கல் வைப்பதை தடுப்பதற்காக புறம்போக்கு நிலத்தில் கற்களை குவித்த அதிமுக பிரமுகர்

சேந்தமங்கலம், மார்ச் 1: புதுச்சத்திரம் அருகே பொங்கல் வைப்பதை தடுப்பதற்காக, புறம்போக்கு நிலத்தில்  கற்களை குவித்த அதிமுக பிரமுகருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள்  போராட்டத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் நவணி ஊராட்சி வாணகாரன் புதூர் அருந்ததியர் தெருவில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் ஊர் பொதுக்கிணறு அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில், அப்பகுதி மக்கள் காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். மேலும், மே மாதம் நடைபெறும் மாரியம்மன் கோயில் விழாவின் போதும், பொது கிணற்றின் அருகில் இருந்து தான், அலகு குத்தி ஊருக்குள் ஊர்வலமாக வருவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் காளியம்மன் பொங்கல் வைக்க அப்பகுதியில் ஏற்பாடு செய்தனர். இந்த நிலத்தின் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. பொங்கல் வைக்க ஊர் தரப்பினர்  ஏற்பாடுகள் செய்து வருவதை  அறிந்த ராஜேந்திரன், நேற்று முன்தினம் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கினார்.

பெரிய அளவிலான கற்களை கொண்டு வந்து, பொங்கல் வைக்கும் புறம்போக்கு நிலத்தில் கொட்டியுள்ளார். மேலும், அப்பகுதியில் பொங்கல் வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், நேற்று காலை அப்பகுதியில் திரண்டனர். கற்கள் கொட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கராஜேந்திரன் தரப்பிற்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீஸ் எஸ்ஐ சந்திரசேகர் தலைமையிலான போலீசார், அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு வந்த புதுச்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், ஊராட்சி மன்றத்தலைவர் கந்தசாமி, அதிமுக ஒன்றிய செயலாளர் கோபிநாத் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுமக்களிடம் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், “பொதுமக்கள் வழக்கம்போல புறம்போக்கு இடத்தில் காளியம்மன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திக் கொள்ளலாம்” என முடிவு செய்யப்பட்டது. மேலும், புறம்போக்கு நிலத்தை சர்வே செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த கற்கள் அகற்றப்பட்டது. பின்னர், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட தொடங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: