ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவை, மார்ச். 1: கேரளா ரியல் எஸ்டேட் அதிபர் கார் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒருவரை கேரளா மாநிலம் பாலக்காட்டில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை நவக்கரை பாலக்காடு நெடுஞ்சாலையில் கடந்த டிச25 ஆம் தேதி பெங்களூரில் இருந்து கோவை வழியாக சென்ற கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அப்துல் சலாம் என்பவர் சென்ற கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை மர்ம கும்பல் வழிமறித்து பறித்துச் சென்றது.  இது குறித்து கோவை க.க.சாவடி போலீசார் வழக்கு பதிந்து கார், பணத்தை கடத்திய மர்ம கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட கார் மறுநாள் மாதம்பட்டி அருகே மீட்கப்பட்டது. மேலும் அந்த காரில் ரகசிய அறையில் சுமார் ரூ.90 லட்சம் ஹவலா பணம் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் கார் கடத்தல் வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த உன்னிகுமார் (44), சந்தீப், சொபின், ராதாகிருஷ்ணன், ஸ்ரீசித் சந்தோஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் தலைமறைவான பாலக்காடு அம்பல பரம்பு, கண்ணகிநகரை சேர்ந்த சுரேஷ்(31). என்பவரை தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் அவரை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது சம்பவத்தன்று அப்துல் சலாம் வந்த காரை சுரேஷ் மற்றொரு காரில் வந்து மறித்ததாகவும், அதன் பின் காரை மற்ற நபர்கள் பறித்த சென்ற பின் மீண்டும் சுரேஷ் கேரளாவிற்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>