குடிநீரில் மலக்கழிவு கலப்பதால் துர்நாற்றம்

கோவை, மார்ச் 1:  கோவை மதுக்கரை காந்திநகர் 3வது வார்டில் நேற்று முன் தினம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதில், குடிநீருடன் மலக்கழிவு கலந்து வந்தது. துர்நாற்றத்துடன் வந்த மலக்கழிவு நீரால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மதுக்கரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் சில இடங்களில் மண்ணை தோண்டி பார்த்த போது பகிர்மான குடிநீர் குழாய் சென்ற இடத்தில் ஒரு வீட்டின் செப்டிங் டேங்க் பழுதாகியிருப்பதும், அதே இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து இரண்டும் ஒன்றாக கலந்திருப்பதும் தெரியவந்தது.

குழாய் சரி செய்து நேற்று மீண்டும் குடிநீர் வினியோகம் ெசய்யப்பட்டது. அப்போதும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டதில் மீண்டும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘குடிநீர் பகிர்மான குழாய் உள்ள இடங்களில் செப்டிக் டேங்க், சாக்கடை கழிவுநீர் மண் தோண்டி சிலர் விடுகிறார்கள். பகிர்மான குழாய் பல இடங்களில் பழுதாகியிருக்கிறது. மலக்கழிவு கலந்த குடிநீரை கவனிக்காமல் நேரடியாக நிலத்தடி தொட்டியில் விட்டதால், தொட்டியில் ஏற்கனவே இருந்த தண்ணீரும் நாறி போய் விட்டது.

குழாயை முற்றிலும் மாற்றவேண்டும். பகிர்மான குழாய் இருக்கும் இடத்தில் சாக்கடை, மலக்கழிவு கலப்பதை தடுக்கவேண்டும். 3வது வார்டில் மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குடியிருப்புகள் உள்ள இடங்களில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் தான் குடிநீரில் மாசு கழிவு கலக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் இன்னும் அலட்சியமாக இருப்பது சரியல்ல’ என்றனர்.

Related Stories: