பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்

ஊத்தங்கரை, மார்ச் 1: ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையிலிருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தப்பட்டதால், பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையின் பாசன வாய்க்கால் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுமார் 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது அணை நிரம்பியதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த 24ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திர பானுரெட்டி கடந்த 24ம் தேதி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து, சுழற்சி முறையில் 105 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் திறக்கப்பட்ட அடுத்த நாள் முதல் நீர்வரத்து நிறுத்தப்பட்டதால், நீர்வரத்து வாய்க்கால்கள் நீர்வரத்து இன்றி காய்ந்து கிடக்கிறது. பல இடங்களில் வாய்க்கால் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் விவசாய கிணறுகளில் நீராதாரம் குறைந்து பயிர்கள் கருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பாம்பாறு அணையிலிருந்து பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: