60 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கோவை அரசு மருத்துவமனை உள்பட 104 மருத்துவமனைகளில் இன்று துவக்கம்

கோவை, மார்ச் 1: கோவை மாவட்டத்தை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என மொத்தம் 104 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி இன்று துவங்குகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி துவங்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நீரிழிவு உள்ளிட்ட இணை நோய்கள் உள்ள 45 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையில் சேவைக்கட்டணம் ரூ.100, தடுப்பூசியின் விலை ரூ.150 என மொத்தம் ஒரு தவணைக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.

தடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வயது சான்றிதழ் ஆகிய சான்றுகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், 45 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் வயதிற்கான சான்று மற்றும் இணை நோய்க்கான மருத்துவ சான்று கொண்டு வர வேண்டும். இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகே தடுப்பூசி போட முடியும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட 25 அரசு மருத்துவமனைகள் மற்றும் 79 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் இன்று (மார்ச் 1) முதல் துவங்குகிறது.

முதல்வரின் காப்பீடு திட்டத்தில் பதிவு பெற்ற மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். இதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோர் செய்துள்ளனர்.

மேலும், தடுப்பூசி போட்ட பிறகும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: