உடுமலை, மார்ச் 1: திருமூர்த்தி அணை நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இதுதவிர, பாலாறு வழியாகவும் அணைக்கு நீர் வருகிறது. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி திட்டத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணையில் இருந்து உடுமலை நகர் மட்டுமின்றி, பல்வேறு கிராமங்களுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.