கல்யாணம், காது குத்து என்ற பெயரில் பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் கடும் நடவடிக்கை

ஈரோடு, மார்ச் 1: ஈரோடு  கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள்  மற்றும் அச்சுக்கூட உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை  விதிமுறைகள் தொடா்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய  கலெக்டர் கதிரவன் பேசியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள  போது, திருமண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாய கூடங்களை அரசியல்  கட்சி பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது, அதன் விபரத்தை உடனடியாக  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களை  தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மண்டபங்களில் பணம்,  பரிசுப்பொருட்கள், வேட்டி, சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக  தடை செய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து  நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுத்து  வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது  அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைத்தல் போன்றவை  தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, திருமண மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும்  நபர்களிடம் திருமண பத்திரிக்கை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை  பெற்று முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு குறித்த விவரங்களை உரிய  பதிவேடுகளில் முறையாக பராமரிக்க வேண்டும். தகவல்களை உடனடியாக  அருகாமையிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களை  தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். வெளியூர் நபர்கள் எவரும் திருமண மண்டபங்களில் தங்க அனுமதி தரக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: