தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தல்

ஊட்டி,மார்ச்1:தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முடிவடையும் நாள் வரை செய்யத் தக்கவை மற்றும் செய்ய கூடாதவை என்னனென்ன என்று தெளிவாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி அந்த அதிகார அடிப்படையில் வாக்காளர்களை கவரும் விதத்தில் புதிய திட்டங்கள், சலுகைகள் அல்லது நிதி உதவிகள் மற்றும் உறுதிமொழி, அடிக்கல் நாட்டுதல் போன்ற எதையும் செய்வது தடை செய்யப்படுகிறது. இந்த தடை புதிய மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கும் பொருந்தும்.  அரசின் திட்டங்களுக்கு புதிய ஒதுக்கீடு செய்ய கூடாது. தேர்தல் பணியில் நடைமுறையில் உள்ள மாவட்டத்தில் நலத் திட்டங்களுக்கு நிதி விடுவிப்பது, பணிகள் செய்வதற்கு நிதி விடுவிப்பது அல்லது ஒப்பந்தாரர்களுக்கு பணி வழங்குவது போன்ற எதையும் செய்ய கூடாது.

பேரிடர் ஏற்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையோ, கருணை தொகையோ வழங்குவதாக இருந்தால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்து விட்டு வழங்க வேண்டும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகை, அளவு அதிகரிக்க கூடாது. அதிகப்படுத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டும். பிரச்சார காலம் முடிந்த பின்பு அரசியல் பிரமுகர்கள் தொகுதியில் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுபாடுகள் விதித்துள்ளது. இதற்காக தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக திருமண மண்டபங்கள், விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், சமுதாய கூடங்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலர்கள் உரிய முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். தேர்தல் பணி தொடர்பாக ஏதேனும் சந்ேதகம் இருந்தால் உடனடியாக அதனை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை நடுநிலையோடு, சிறப்பாக மேற்கொள்ள வேண்டும், என்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட எஸ்பி., பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: