தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஊட்டி,மார்ச்1: தமிழக சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது. அன்றைய தினத்தில் இருந்து ேதர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுபாட்டில் நீலகிரி மாவட்டம் வந்துள்ளது. இதனை ெதாடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள முதல் அமைச்சரின் படங்கள் அகற்றப்பட்டன. அரசின் சாதனைகளை கூறுவதற்காக கொண்டு வரப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் பிரச்சார வாகனத்தில் இடம் பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதலே, ஊட்டி நகரில் பல இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் வைத்திருந்த போஸ்டர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

தொடா்ந்து ஊட்டி நகரில் கலெக்டர் அலுவலக சாலை, கோத்தகிரி சாலை, எட்டின்ஸ் சாலை, குன்னூர் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோர தடுப்பு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பர போஸ்டர்கள் அகற்றும் அழிக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழக அரசின் மலிவு விலை உணவகம் உள்ளிட்டவற்றில் உள்ள முதல்வரின் படம் அகற்றப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஜெெஜ., நினைவு தூண் போர்வை கொண்டு மூடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் போன்றவற்றை அகற்றும் பணிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு அதன் சாவி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கார்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுத்திடும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூா் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு, தலா 3 என 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பல்வேறு இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் இவர்கள் சோதனைச்சாவடிகள் மற்றும் சந்தேகப்படும் படியான இடங்களில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தொட்டபெட்டா பிரிவு, லவ்டேல் பிவரிவு, மஞ்சூர், குஞ்சப்பனை, கூடலூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனையானது உடனுக்குடன் வீடியோவில் பதிவும் செய்யப்படுகிறது.

Related Stories: