×

ஆதி கருவண்ணராயர் கோயில் விழா 500 கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சத்தியமங்கலம்,  மார்ச் 1:  பவானிசாகர் வனப்பகுதி ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழாவில் 500 கிடாய்கள் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்கு  உட்பட்ட தெங்குமரஹடா வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று மாசிமகம், பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம்.  உப்பிலிய நாயக்கர்களின் குல  தெய்வமான ஆதி கருவண்ணராயர் மாசிமகம், பொங்கல் திருவிழாவில் ஈரோடு, கோவை,  திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 20க்கும்  மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டு ஆதி கருவண்ணராயர் கோயிலில் பொங்கல் வைத்து  கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதற்கென  வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர்  அனுமதி வழங்கியதை தொடர்ந்து பொதுமக்கள் வாகனங்களில் வனப்பகுதியில் உள்ள  கோயிலுக்கு சென்று ஆதி கருவண்ணராயர் கோயில் தீர்த்தம் தெளித்து கிடாய்  வெட்டி நேர்த்தி கடன் செலுத்தியதோடு அங்கேயே குடும்பத்துடன் கறி சமைத்து  சாப்பிட்டனர்.

கடந்த 3 நாட்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி  நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று சிறப்பு  பூஜைகளுடன் விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும்  போலீசார் கோயிலில் தங்கியிருந்த பொதுமக்களை வனப்பகுதியில் இருந்து  வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து அனைவரும் வனப்பகுதியை விட்டு  வெளியேறினர். திருவிழாவில் நன்கொடை மற்றும் உண்டியல் பணம் ரூ.3.34 லட்சம் கிடைத்ததாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Adi Karuvannaya Temple Festival ,
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை