மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த 65 இடங்கள் தேர்வு

ஈரோடு, மார்ச் 1:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த 65 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்திட தொகுதி வாரியாக இடங்கள் தேர்வு செய்து ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மட்டுமே அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும், கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 இடங்கள், ஈரோடு மேற்கு தொகுதியில் 12 இடங்கள், பவானி 9, அந்தியூர் 12, கோபி 7, பெருந்துறை 7, பவானிசாகர், மொடக்குறிச்சி தலா 4 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 65 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் விண்ணப்பிக்கும் போது, தேர்வு செய்யப்பட்டுள்ள 65 இடங்களுக்கு அனுமதி கேட்டு மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>