கொரோனா நோயாளிகளுக்கு தபால் ஓட்டு

ஈரோடு, மார்ச் 1:   கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தபால் ஓட்டு போடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தை ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு கோட்டாட்சியர் சைபுதீன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தபால் வாக்கு படிவங்களை பெற்று வாக்களிக்கலாம்.

இதே போல, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரும் தபால் ஓட்டு போடலாம். இதற்கான 12டி படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆதாரங்களுடன் அளிக்க வேண்டும். தபால் ஓட்டுகளை மூன்று அலுவலர் கொண்ட குழு வீடு, வீடாக சென்று பெற்று ஓட்டு பெட்டியில் சேர்க்கும். பொது இடங்களில் தேர்தல் அலுவலர் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சியையும் நடத்த கூடாது.

தேர்தல் காலத்தில் பிடிபடும் பணத்துக்கு உரிய ஆதாரம், விளக்கம், பரிந்துரை இருந்தால் போதுமானது. விசாரணை அலுவலருக்கு விசாரணையில் திருப்தி இருந்தால், பணத்தை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். இல்லையெனில் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் சேர்க்கப்படும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுவரொட்டி, பேனர், பிளக்ஸ் வைக்க அனுமதியில்லை. கிராமப்புற பகுதியில் வீடு, கட்டிடம், இடத்தின் உரிமையாளரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் சுவரொட்டி, பேனர் வைக்கலாம். இவ்வாறு பேசினர்.

Related Stories:

>