சட்டமன்ற தேர்தலையொட்டி ரயிலில் வரும் பார்சல்கள் தீவிர கண்காணிப்பு

ஈரோடு,  மார்ச் 1:  சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மார்க்கமாக செல்லும் ரயிலில்  வரும் பார்சல்களையும், பார்சல் அலுவலகங்களிலும் போலீசார் தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான  வாக்குபதிவு வரும் ஏப்.,6ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து  மாவட்டத்திலும் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல்  பறக்கும் படையினர், போலீசார், வருவாய் துறையினர் அடங்கிய குழுவினர்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரயில்கள் மூலமும்  அரசியல் கட்சியினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பரிசு பொருட்களை  ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பி வைக்க கூடும் என்பதால்,  ரயில்வே பார்சல் அலுவலகங்கள், ரயில்களில் செல்லும் பயணிகளின் உடமைகளையும்  சோதனை செய்து கண்காணிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்பேரில்,  ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே  பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார், பார்சல் அலுவலகத்தினருடன் இணைந்து  ரயில்வேக்கு வரும் பார்சல்களை சோதனை செய்து வருகிறோம். அதுமட்டும்  அல்லாமல் சந்தேகத்திற்குரிய பார்சலாக இருந்தால், அதனை உடனடியாக பிரித்து,  யார் அனுப்பியது, எங்கு செல்கிறது என தெரிந்து சம்பந்தப்பட்ட நபரை நேரில்  வரவழைத்து விசாரணை நடத்தி தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து  விடுவோம். ரயிலில் பார்சல் மூலம் பணம், பரிசு பொருட்கள் அனுப்பி வைப்பது  நமது மாநிலத்தில் குறைவு தான். அது மட்டும் அல்லாமல், தற்போது அனைத்து  பயணிகளும் முன்பதிவு செய்து பயணிப்பதால், அவர்கள் விவரம் எளிதாக தெரிந்து  விடுகிறது. இதேபோல், ஓடும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு  படையினரும், மப்டியில் உள்ள போலீசாரும் பயணிகளை கண்காணித்து, சந்தேகம்  இருந்தால் அவர்களது உடமைகளை சோதனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories:

>