பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்

அண்ணாநகர், மார்ச் 1: அமைந்தகரையில் மகளுடன் வீட்டில் இருந்த பெண்ணை வெட்டி கொன்றுவிட்டு, 80 நகைகளை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (48), கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி (44), இவர்களது மகள் மோனிகா (23), பட்டப்படிப்பை முடித்து சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி கமலக்கண்ணன் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். ஜெயந்தி, மோனிகா ஆகியோர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்தனர். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் ஜெயந்தி, மோனிகாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், இருவரையும் மீட்டு அரசு பொது  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஜெயந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். மோனிகா சிகிச்சை பெற்று வருகிறார்.  

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தண்பிய 2 மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். ஆனால், மர்ம நபர்களின் உருவம் சரியாக தெரியாததால் அவர்களை கைது செய்ய முடியாமல் திணறினர். இந்நிலையில், தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி பேராசிரியர் ரவி வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன், டிவி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போன வழக்கில், தாம்பரம் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 3 பேர் இந்த கொள்ளை ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதில் ஒருவன், வடசென்னையை சேர்ந்த பிரபல கொள்ளையன் அந்தோணி (எ) வெள்ளை அந்தோணி (35) என தெரியவந்தது. அவனை பிடிக்க புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா உதவியை தாம்பரம் போலீசார் நாடினர்.

அவரது தலைமையில் தனிப்படையினர், நேற்று முன்தினம் மாலை அந்தோணி மற்றும் அவனது கூட்டாளி பாலாஜி (23) ஆகியோரை புளியந்ேதாப்பு பஜார் பகுதியில் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தாம்பரம் மட்டுமின்றி, அமைந்தகரையில் தாய், மகளை வெட்டிவிட்டு 80 சவரனை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: ஜெயந்தி வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ரவுடி செல்லப்பா (35), ஜெயந்தி வீட்டில் நிறைய நகைகள் இருப்பதாகவும், அதை கொள்ளையடிக்க எங்களுக்கு திட்டமும் வகுத்து கொடுத்தார். அதன்படி, சம்பவத்தன்று ஜெயந்தியின் கணவர் வேலைக்கு சென்றதும், அவது வீட்டிற்கு சென்றோம். அங்கிருந்த ஜெயந்தி கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் உள்ள நகை, பணத்தை தரும்படி மிரட்டினோம்.

ஆனால், நகை, பணத்தை தர மறுத்தார். இதையடுத்து, பீரோவை திறந்து பார்த்த போது, ஜெயந்தி கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்து ஜெயந்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டினோம். தடுக்க முயன்ற மகள் மோனிகாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, பீரோவில் இருந்த 80 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினோம். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு தப்பினோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி செல்லப்பன் (எ) செல்லப்பாவையும் (49) கைது செய்து விசாரிக்கின்றனர். இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை மற்றும் அடிதடி உள்ளிட்ட 40 வழக்குகள் சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: