முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 1: காஞ்சிபுரம் மாவட்ட முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சேகர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். சமூக செயற்பாட்டாளர்  டிஎஸ்எஸ். மணி சிறப்புரையாற்றினார். இந்தப் போராட்டத்தில் மருத்துவர், வண்ணார் உள்ளிட்ட குறுஞ்சமூகங்களுக்கு எம்பிசி பட்டியலில் 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மருத்துவர் சமூகத்தின் மீது தொடரும் வன்கொடுமை நீங்கிட ஒடிசா அரசு கொண்டுவந்து அமல்படுத்துவதுபோன்று கொத்தடிமை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், சக்திவேல், வினோத் உள்ளிட்ட ஏராளமான முடி திருத்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>