திருவானைக்காவல் கோயிலில் முருகன் சிலை மாயம்? சமூகவலைதளத்தில் வைரலால் பரபரப்பு

திருச்சி, பிப்.26: திருவானைக்காவல் கோயிலில் முருகன் சிலை மாயமாகி விட்டதாக போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் நீர் ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். இக்கோயில் பிரகாரத்தில் முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை இருந்தது. இந்த சிலையை தற்போது காணவில்லை என சமூகவலைதளங்களில் செய்தி மற்றும் படம் வைரலாக பரவியது. அந்த போட்டோவில் சன்னதியில் முருகன் சிலை இல்லை. சிலையை தாங்கும் அடிபீடம் மட்டுமே இருந்தது. இது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி கோயில் உதவி ஆணையர் மாரியப்பனிடம் கேட்டபோது, இங்கு முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆனால் அங்கு சிலை எதுவும் கிடையாது. சுவரோடு கூடிய புடை சிற்பம் தான் உள்ளது. அதில் தான், முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருப்பார். கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர்களுக்கு இது நன்றாக தெரியும். சமூகவலைதளங்களில் பரவிய புகைப்படம், இங்குள்ள முருகன் சன்னதிதான். ஆனால் புடை சிற்பத்துக்கு கீழ் உள்ள பூஜை பொருட்கள் வைக்கும் சிமென்ட் கட்டை, முருகன் சிலை இருந்த பீடம் என சிலர் தவறுதலாக நினைத்து விட்டனர். இதனால் சிலை மாயமானதாக செய்தி பரவி விட்டது. சிலை மாயமானதாக கூறப்பட்டது முற்றிலும் வதந்தியாகும். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

Related Stories:

>