திருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு

திருவாரூர், பிப்.26: திருவாரூரில் நேற்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்து 840 பேர் தேர்வு செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது திருவாரூர் அருகே சொரக்குடியில் உள்ள ஆரூரான் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது. இதில் காலை 8 மணி அளவில் முகாமிற்கு வந்திருந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப படிவத்தினை கலெக்டர் சாந்தா மற்றும் வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவன் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர். அப்போது கலெக்டர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதனை இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவன் பேசுகையில், படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இளைஞர்கள், பெண்களுக்கு பல்வேறு பயிற்சித் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பிலும் போட்டித் தேர்வுகளுக்கு முறையான இலவச வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே இதனை இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் மொத்தம் 5,632 பேர் கலந்து கொண்ட நிலையில் 1,238 பேருக்கு பணி ஆணைகளை கலெக்டர் சாந்தா மற்றும் வேலைவாய்ப்பு இயக்குனர் வீரராகவன் ஆகியோர் வழங்கினர். மேலும் 602 பேர் முதற்கட்ட தேர்வு என மொத்தம் 1,840 பேர் இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டனர். இதுமட்டுமன்றி சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் பெறுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. முகாமில் டிஆர்ஓ., பொன்னம்மாள், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, நன்னிலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: