×

தேசிய தனிநபர் கடன் அதிகரிப்பை தவிர்த்திட ஒன்றிய, மாநில அரசுகள் இலவசம் தவிர்க்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்

திருவாரூர்: திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 43வது வணிகர் தினத்தையொட்டி விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* ஒன்றிய, மாநில அரசுகளின் இலவசங்களால் தேசிய கடன் அதிகரிப்பை தவிர்த்திடவும், வளர்ச்சி சார்ந்த உழைப்போடு கூடிய உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டமைத்திடவும் இலவசங்களை முழுமையாக தவிர்த்திட வேண்டும். தேர்தல் காலத்தின் போது ரூ.5 லட்சம் வரையில் வியாபாரிகள் தொகை எடுத்து செல்வதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்திட வேண்டும்.

* இயற்கை வளங்கள் வருங்கால சந்ததிகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்திட மரம், மலை, மண், நீர், காற்று போன்றவை அழிந்து போகாமல் மாசு கட்டுப்பாடு சட்டங்களை மேம்படுத்திட வேண்டும். பிளாஸ்டிக்களுக்கான மாற்று பொருட்களை உருவாக்கிடும் வரை ஒன்றிய, மாநில அரசுகள் தொலைநோக்கு சிந்தனையோடு சட்ட நடை முறைகளை வரைமுறைபடுத்திட வேண்டும். விவசாயம், வேளாண் உற்பத்தி சார்ந்த நீர் ஆதாரங்களை மேம்படுத்திட கங்கை, காவேரி, கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் முன்னுரிமை அளித்து செயலாற்றிட வேண்டும்.

* நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வணிகர் அமைப்பு பிரதிநிதி ஒருவருக்கு வழங்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

* குடிநீருக்கான வரி விதிப்பை முழுமையாக விலக்கி அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட விலையில்லா குடிநீர் வழங்கிட வேண்டும்.

* மாவட்டங்கள் தோறும் இருக்கும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு பிரிவில் வணிகர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து புதிய சட்டங்களை இயற்றிட வேண்டும்.

* கார்ப்பரேட் கம்பெனிகள் சில்லறை வர்த்தகத்தில் கால் பதிக்காத வகையில் சில்லறை வணிக பாதுகாப்பு சட்டம் ஒன்றினை இயற்றிட வேண்டும். என்பது உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags : Union ,Tamil Nadu Chamber of Commerce and Industry ,Thiruvarur ,43rd Merchants Day ,State ,President ,Wickramaraja ,State… ,
× RELATED தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு...