×

பந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்

திருவாரூர், பிப்.26: திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பந்தல் அமைக்க முயற்சித்ததை தடுத்த போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் கடந்த 22ம் தேதி முதல் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றும் 4வது நாளாக இந்த காத்திருப்பு போராட்டத்தினை நடத்துவதற்காக சாமியானா பந்தல் அமைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில் அதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் பிரேமா, செயலாளர் தவமணி உட்பட 150 பேர் தாலுகா போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு காட்டூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்