டெல்லி: ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் டெல்லி கேபிடல்சும்-சென்னை சூப்பர் கிங்சும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக பதும் நிசாங்கா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், நிசாங்க 19 ரன்னிலும், கே.எல்.ராகுல் 12 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்தடுத்து வந்த நிதிஷ் ரானா 15 ரன், கருண் நாயர் 13, கேப்டன் அக்சர் பட்டேல் 2 ஆட்டமிழக்க 69 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. பின்னர் வந்த டிரஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ரிஸ்வி ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியில் ஸ்கோரை உயர்த்திய நிலையில், டிரஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்னில் நடையை கட்டினார். அடுத்த அசுதோஸ் சர்மா, ரிஸ்வியுடன் சேர்ந்து அதிரடி காட்ட 20 ஓவர் முடிவில் டெல்லி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது.
ரிஸ்வி 40 ரன் (24 பந்து, 4 சிக்சர்), அசுதோஷ் சர்மா 14 ரன் (5 பந்து, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்து வீச்சில் நூர் அகமது 2, ஓவர்டன், குர்ஜப்நீட் சிங், முகேஷ் சவுத்ரி, ஹூசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
