×

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடி, பிப்.26: காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.7,850 வழங்கவேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திரசேகர், சங்க நிர்வாகிகள் சீனிவாசன், வீரமணி, ராதிகா ஆகியோர் பேசினர். இப் போராட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி வட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு