காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்

பட்டுக்கோட்டை, பிப்.26: வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்னர். அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் உள்ள வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகம் முன் நேற்று தமிழக அரசை கண்டித்து நூதனப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பரஞ்ஜோதி தலைமை வகித்தார். போராட்டத்தில், தமிழக அரசை ஒரு கல் வடிவில் நாற்காலியில் அமர வைத்து, அதற்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து கூறுகையில், அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆனால் தமிழக அரசு ஒரு கல்லு போல இருக்கிறது. எனவே உடனே தமிழக அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

Related Stories: