×

தமிழக மக்களின் உயர்ந்த ஜனநாயகத் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக மக்களின் உயர்ந்த ஜனநாயகத் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ள வாழ்த்துகளை முதலில் நினைவுகூர்கிறேன். அதன் தொடர்ச்சியாக, விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எனது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளப் பெருமக்களே, உங்கள் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் எங்களுக்கு புதிய உறுதியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. உங்களது ஒவ்வொரு வாக்கும் மக்களின் ஆட்சியே உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஒன்றுபட்டு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த அனைத்து தோழமைக்கட்சிகளுக்கும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வும் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் அரசியல் பண்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் கிராமம் முதல் மாநகரம் வரை கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நல இலட்சியங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்த காங்கிரஸ் உறவுகளான மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உறுதியும் உழைப்பும் மற்றும் கட்சியின் மீதான பற்றுதலே நம் இயக்கத்தின் வலிமையான அடித்தளமாகும்.

சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகிய அடிப்படைப் பண்புகளை உறுதியாகக் காத்து, மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்படுவோம். மக்களோடு இணைந்து, மக்களுக்காக, மக்களின் உரிமைக்காக எப்போதும் செயல்படுவோம் என்ற உறுதிமொழியுடன், இந்த அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்துவோம்.

‘மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி, மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை” என தெரிவித்துள்ளார்.

Tags : Assembly elections ,Tamil Nadu ,Wealwapdrunthakai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Assembly ,
× RELATED தமிழ்நாட்டு மக்கள் தந்த அதிர்ச்சியான...